என்னை பண்படுத்திய தருணங்கள்
என்னை பண்படுத்திய சில நிகழ்வுகள்
ஜூலை 6, 2024 தினமலர் சிறுவர் மலர் இதழில், என்னை பள்ளியில் ஊக்குவித்த இரண்டு ஆசிரியர்களை பற்றி குறிப்பிட்டு எழுதி இருந்தேன். (பெட்டிச் செய்தியில் காண்க).
என்னை பண்படுத்திய மேலும் சில நிகழ்வுகள்:
1. 1973 மே மாதம் என்பது என் நினைவு SSLC (11 ஆம் வகுப்பு) தேர்வு முடிவுகள் நாளிதழில் வந்திருந்தது. தேர்ச்சி பெற்றவர்களில் என் என்ணும் இருந்தது. காலை 10 மணிக்கு நான் படித்த ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளி T. Nagar (Main Branch) இல் தேர்வு சான்றிதழும் மதிப்பெண் பட்டியலும் பெற சென்றிருந்தேன். எனது வகுப்பாசிரியர் MKR என்று அழைக்கப்படும் M.K.ராமசாமி அவர்கள் மிகவும் கோபத்தோடு, "உன்னிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஏமாற்றி விட்டாய்"என்று கூறிவிட்டு, பதில் எதிர்பாராமல் சென்று விட்டார். குழப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழை பெற்றபோது,எனது மொத்த மதிப்பெண் 60 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது. அரையாண்டு தேர்வில் நல்ல 70 சதவிகிதத்திற்கும் மேலாக பெற்றிருந்தேன். 11-Gயில் படித்த ஞானானந்த பிரசாத் பள்ளியின் முதல் மாணவனாக வருவான் என்று தெரிந்திருந்தாலும் 11-Fல் படித்த நான் குறைந்தது 450 மதிப்பெண் (600க்கு) வாங்குவேன் என என் ஆசிரியர் எதிர்பார்த்திருந்தார். எனது ஆசிரியரின் கோபம், நான் வாங்கிய குறைவான மதிப்பெண்ணை விட, என்னை மிகவும் பாதித்தது. ஒரு முறை படித்த பிறகு மறுமுறை படிக்காததும், ஆண்டு தேர்வுக்கு முந்தைய தினங்களில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் விளையாட்டில் ஈடுபட்டதும், எனது குறைவான மதிப்பெண்ணுக்கான காரணம். எனது மோசமான கையெழுத்தும் கூடுதல் காரணம். ஆசிரியரின் வருத்தம், ஆண்டு தேர்வுகளுக்கு என்னை நன்கு தயார் செய்ய தூண்டியது. அது அவ்வளவு எளிதாக இல்லை. இளங்கலை (இயற்பியல்) கணிதம் மூன்றாவது ஆண்டு தேர்வு முதல், உறுதியுடனும் வைராக்கியத்துடனும், கடும் பயிற்சி மேற்கொள்ளும் குணம் வந்தது. பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை கணிதம் வகுப்பின் மூன்றாம் மாணவனாக வந்தேன். (மொத்த மதிப்பெண் 75%க்கு மேல் பெற்றேன்). முதுகலை (இயற்பியல்) கணிதம் பயின்று, அதே கல்லூரியின் முதல் மாணவனாக வரும் பாக்கியம் பெற்றேன். ஆனால் இந்த சந்தோஷத்தை ஆசிரியர் MKRடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்பு விட்டுப் போனது தான் காரணம்.
அவரின் கோபமும், வருத்தமும், திறமை மட்டும் இருந்தால் போதாது, அளவற்ற தினசரிப் பயிற்சியும் நல்ல மதிப்பெண் பெற முக்கிய காரணி என்று தெரிந்து கொள்ள உதவியது.
2. முதுகலை (இயற்பியல்) கணிதம் பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். அது நான்கு செமஸ்டர் கொண்டது. முதல் செமஸ்டரில் இருந்தே நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். மதிப்பெண்கள் C, B, A, O என்ற Grade அடிப்படையிலானது. 'C' என்பது தேர்வு பெறவேண்டிய குறைந்த மதிப்பெண் மற்றும் 'O' என்பது Outstanding (மிக அதிகம்) என்பதையும் குறித்தன. மூன்று செமஸ்டர்கள் முடிந்த போது நான் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலை கணிதத்தில் 'O' Gradeல் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. நான்காவது செமஸ்டரும் நன்றாகவே எழுதினேன். பரீட்சை முடிவுகள் வெளிவந்து சான்றிதழ் பெற சென்றபோது கல்லூரி முதல்வர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், சிறிது நேரம் காத்திருக்கும்படியும் சொன்னார்கள். கணிதத் துறைக்குச் சென்ற போது தலைமைப் பேராசிரியர் திரு வீரராகவன் என்னை கூப்பிட்டு அனுப்பி "உனக்கு C Grade தான் கிடைத்திருக்கிறது. நீ பேராசிரியர்களிடம் மிகப் பணிவுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்" என்றும் மற்ற பல கடுமையான வார்த்தைகளாலும் அறிவுரை கூறினார். 'C Grade' ற்கான வாய்ப்பே இல்லை. எதனால் அவ்வாறு கூறினார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ் கிடைத்த பொழுது நான் O Gradeல் தேறி இருப்பது தெரிந்தது. கல்லூரியின் முதல் மாணவனாகவும் வந்தேன். ஆனால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. பேராசிரியரின் கோபம் மனத்தில் நின்றது. மற்றும் அதன் காரணம் புரிந்தது. நான் இளங்கலை கணிதம் பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது, சில மாணவர்கள் ஒரு உதவி பேராசிரியரிடம் விளையாட்டு என்று நினைத்து ஒரு வருந்தத்தக்க செயலை செய்ததும், அது யார் என்று கடைசி வரை தெரியாததும் பேராசிரியர் கோபத்தின் காரணம். அவர் முதுகலை கணிதம் எங்களுக்கு எந்த வகுப்பையும் எடுக்கவில்லை என்றாலும் இளங் கலை மாணவர்களின் மீதான கோபம், அவர் மனத்தில் இன்னமும் இருப்பது புரிந்தது. அவரிடம் சென்று விளக்க எனக்கு தைரியம் வரவில்லை.
இந்தச் சம்பவம் திறமை மட்டும் இருந்தால் போதாது, நல்லவர்களின் அதிலும் குறிப்பாக ஆசிரியர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்தும் மிக முக்கியம் என புரிய வைத்தது. நான் கணித பேராசிரியராக வேண்டும் என்ற இலட்சியம் கொண்டிருந்தேன். ஆனால், வங்கியில் சேரும் வாய்ப்பு தான் கிடைத்தது. வேலையும் ஒரு வருடம் கழித்து தான் கிடைத்தது. பேராசிரியரின் சாபம் காரணமா? - தெரியவில்லை.
நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒருவன் உருவாகும் போது தான், அவனுக்கு சமுதாயத்தில் உண்மையான உயர்வு கிடைக்கிறது. சமுதாயமும் பயனடைகிறது.
மற்றவர்களின் கோபம்/ வருத்தம் மட்டுமல்ல, மிகையான பாராட்டுகளும் (வாழ்த்து பெறும் போது, இன்னமும் அந்த பாராட்டிற்கான தகுதியினை அடையாததால்) நம்மை பண்படுத்த வல்லவை. இரண்டு நிகழ்வுகள் இதோ.
(i) பள்ளியிலும், கல்லூரியிலும் இறுதியாண்டின் நிறைவில் நண்பர்களிடம் சிறிய autograph புத்தகத்தில் அவர்கள் என்ணத்தையும், கையெழுத்தையும் வாங்கிக் கொள்வது எனது வழக்கமாக இருந்தது. ஒரு நண்பர் எழுதினார் 'I find you as a pearl in the class, I want you to be a jem in the world' என்று. தமிழ்ப்படுத்தினால் "மெருகுபடுத்தப்படாத வைரமாக உன்னை காண்கிறேன். உலகின் ஒரு மாணிக்கமாக நீ வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று சொல்லலாம். என்னை புரட்டி போட்ட வார்த்தைகள் இவை. (இன்னமுமே). என் வீட்டிலும் வெளியிலும், நான் அதுவரை பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை, உதாசீனப்படுத்தப்பட்டதும் இல்லை. 'மெருகுபடுத்தப்படாத' என்பது உண்மை. ஆனால் வைரமா? இல்லவே இல்லை. எனது எந்த குணம் அல்லது திறமையைக் கண்டு இவ்வாறு எழுதினார்? இப்பொழுதும் என் நண்பரிடம் இதனைப் பற்றி கேட்க கூச்சமாகத்தான் இருக்கிறது ஆனால் இந்த பாராட்டின் விளைவு, நான் செய்யும் எந்த ஒரு காரியத்தையும் அது என் திறமையை வெளிக் கொண்டு வருமா, நேர்மையான செயல்தானா, மற்றவர்களுக்கு பயன் அளிக்குமா என்று என்ணத் தூண்டுகிறது. மற்றவர் நலன் புறக்கணித்த சுயநலமாக இருப்பின், மறுஆய்வு செய்ய வைக்கிறது. நான் மிக சாதாரண மனிதன். இப்பொழுதும் நிற்பது முதல் படியில்தான். சறுக்கிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என் வாழ்நாள் முடியும் முன் அடுத்த படிக்காவது சென்று நண்பரின் பாராட்டிற்கு ஓரளவு தகுதி உடையவன் ஆக வேண்டும் என்பது ஆசை.
2. திரு. கிறிஸ்ட்டோபர் ஹிக்மேன் (Mr. Christopher Hickman), நான் பணி புரிந்த SBT Mount Road கிளையின் தலைமை மேலாளராக இருந்தார். என்னை மிகவும் விரும்பினார். ஒரு முறை வங்கியின் தலைமைப் பொது மேலாளர் வருகை தந்த போது, அவர் முன் திரு. ஹிக்மேன் என்னை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் பேசியது எனக்கு மிகுந்த கூச்சத்தை உண்டாக்கியது. ஏனெனில் சில தன்மைகள் நான் இப்பொழுதும் கூட அடையவில்லை. தலைமைப் பொது மேலாளர் சென்ற பிறகு நான் கேட்டேன் "என்னைப் பற்றி கூறிய குணாதிசயங்களுக்கு/திறமைகளுக்கு மாறாக நான் நடந்து கொண்டதாக எதிர்காலத்தில் யாரேனும் கூறினால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?" அவர் கூறினார். "நான் மௌனமாக இருந்து விடுவேன். உன்னை புகழ்ந்த வாயால் எப்படி மாற்றுக் கருத்தினை அங்கீகரிக்க முடியும்?" இது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இரண்டு பாடங்கள் கற்றுக்கொண்டேன். ஒன்று திறமைகள் மற்றும் குணங்களுக்காக ஒருவரை விரும்ப ஆரம்பித்தால், பொதுவெளியில் நாமே அவரை குறை கூறக்கூடாது. இரண்டு திரு.ஹிக்மன் விவரித்த குணங்களை/திறமைகளை இனியேனும் வளர்த்துக் கொள்வது அல்லது முயற்சியாவது செய்வது.
உங்கள் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்திருக்கக்கூடும். விருப்பம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்
அன்புடன்
வெ. விஸ்வநாதன்.
16 செப்டம்பர் 2024.
பெட்டிச் செய்தி
Super sir. 👍👌👍
ReplyDeleteVery candid. Not afraid to speak the truth
ReplyDeleteThank you
DeleteVery Nice Sir, Getting the best out of another is a virtue unique to our teachers, those who have groomed us. 👌
ReplyDelete