சத்யபாமாவும் கிருஷ்ணனும்
சத்யபாமாவும் கிருஷ்ணனும் (புராணக் கதை அல்ல) எனது மைத்துனி சத்யபாமா (பாமா) பெருமாள் திருவடி நிழலில் இணைந்து, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. நாராயணனைச் சேரும் 12ஆம் நாள் நிகழ்ச்சியும், சுபஸ்வீகாரமும், ஒரு வாரம் முன்பு நிறைவு பெற்றன. ஆனால், மனம் இன்னமும் ஒரு நிலைக்கு வரவில்லை. ஓய்வு பெற்ற பின் உணர்ச்சிவசப்படாமல், யதார்த்த நிலையில் வாழ விரும்பியும், எதிர்பார்ப்பு ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டியும், என்னைச் சுற்றி ஒரு சிறிய வட்டம் போட்டு, மற்றவர்களிடம் இருந்து ஒரு சிறிய மனஇடைவெளியுடன் பழகும் எனக்கே இப்படி என்றால், கோமளா, உஷா (சகோதரிகள்), குமார் (இளைய சகோதரன்) நிலையை யோசித்துப் பார்க்கிறேன். என் மனைவி உஷா, தன் 'ப்ரிய சகி' யையும் கோமளா, குமார் தங்கள் தாயின் பாதுகாக்கும் சிறகினையும் இழந்திருக்கிறார்கள். பாமாவும் உஷாவும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதை விட இணை பிரியா தோழிகள் என்று தான் கூற வேண்டும். உஷா உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பாமாவுடன் எப்படியாவது எல்லா நாட்களிலும் 15 நிமிடமாவது பேசியிருப்பாள். இருவரும் பேசாத subject ஒன்று உலகில் இருக்காது. அரசியல், சமையல், உறவினர், நண்பர்கள...