திருமண நாள்: 30ல் அடி எடுத்து வைத்தாயிற்று

 திருமண தினம்: 30ஆம் ஆண்டின் தொடக்கம்

மார்ச் 25, 2025. உஷாவும் நானும் திருமணம் புரிந்து 29 ஆண்டுகள் முடிந்து விட்டன. தமிழ் வருடத்தை கணக்கெடுத்தோமானால், யுவ வருடத்தில் (1995-96) கல்யாணம் நடந்ததால், 14 ஏப்ரல் அன்று, 30 தமிழ் வருடங்கள் முடிந்து விட்டன.  

எங்களை அறிந்தவர்கள்  அனைவரிடமும்  "முகம் மலர்ந்து,  நட்பு கொள்ளும், உதவி புரியும் உஷா எப்படி ஒரு 'hard nut to crack' (புரிந்துகொள்ளக் கடினமான) விஸ்வநாதனை மணம் புரிந்தாள்", என்றும் "வைஷ்ணவத்தை தங்கள் வாழ்வுடன் ஐக்கிய படுத்திக் கொண்ட ஒரு குடும்பம் எவ்வாறு சைவ சித்தாந்தத்துடன் இணைந்த ஒரு குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டது" என்றும் கேட்க விளைவை, அவர்கள் முகத்தில் கண்டிருக்கிறேன். எனது பதில் (உஷாவின் பதில் கூட) ஒன்றுதான். நெடுநாள் நண்பர்கள் ஆன நாங்கள், இனி இணைந்தே பயணிக்கலாம் என்ற யோசனையை வைத்த போது, இரண்டு வீடுகளிலும் அதனை சந்தோஷமாகவும், மனம் நிறைந்த ஆசிர்வாதங்களுடனும் அங்கீகரித்து நிறைவேற்றி வைத்தார்கள். சில சுவாரஸ்யமான விஷயங்களை பதிவிடலாம் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்த எழுத்துரை.

திருமணம்: 1994ல் அப்பாவிற்கு முதல் மாரடைப்பு வந்த பின்பு அவரால் வெளியில் அதிகம் நடமாட முடியவில்லை. 1995ல் நடக்க வேண்டிய திருமணம், அதனால் ஒரு வருடம் தாமதம் ஆயிற்று. 1996 ஜனவரியில் அப்பா ஹார்டிக் நர்சிங்‌ஹோமில் சேர்க்கப்பட்ட போது "எனக்காக காத்திராமல் நீயே மூன்று கல்யாண தேதிகளை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் உஷா உடன் சென்று குறித்துக் கண்டு வா" என்றார். அப்படிக் குறித்துக் கொண்டு வந்ததில், மார்ச் 25 தேர்வு செய்யப்பட்டது. மார்ச் 20 அன்று  SBT தலைமை அலுவலகத்திலிருந்து நான், மார்ச் 25ந் தேதி அன்று, MMGS III பதவி உயர்வு நேர் காணலுக்கு வரவேண்டும் என்ற செய்தி கிடைத்தது. மார்ச் 25க்கு முன்பே என்னை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் ஏற்கப்பட்டு, மார்ச்  22 அன்று நேர்காணல் செய்யப்பட்டேன். நேர்காணல் முடிந்தபின் குழுவின் உறுப்பினர் (Mr. Sebastian Chacko) "ஏன் தேதியை மாற்ற விண்ணப்பித்தாய்" என்று கேட்டார். "நேர்காணல் அல்லது கல்யாணம் என்ற நிலையை மாற்றி, இரண்டிலும் பங்கு கொள்ளவே" என்று நான் பதிலளித்ததும் அனைவரும் சிரித்தனர். எளிமையான முறையில் திருமணம், அனைவரையும் வரவேற்க Reception என்பதில் நானும் உஷாவும் தெளிவாக இருந்தோம். அப்பா எல்லாவற்றுக்குமே சம்மதித்தார். என் அம்மாவும், என் உடன் பிறந்தவர்களும் பெருந்தன்மையாக ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. உஷாவின் வீட்டிலும் இதற்கு உடன்பாடு இருந்தது. எங்கள் வீட்டு திருமண அழைப்பிதழ் வெள்ளை நிற அட்டையில், நீல நிற அச்சு வார்த்தைகளுடன், தயார் செய்தோம். உஷாவின் வீட்டு அழைப்பிதழ் Maya Cards அட்டையில் அருமையாக தயாரிக்கப்பட்டது. திருமாங்கல்யம் உஷாவும் அம்மாவும் சென்று order செய்தனர். (இப்பொழுது இரண்டு திருமாங்கல்யங்களையும் சைவ முறைப்படி செய்திருக்காமல், ஒன்றினை வைஷ்ணவ முறைப்படி செய்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது) திருமணம் 'சைவ -வைஷ்ணவம்' ஒன்று கூடிய 'சிவா விஷ்ணு' கோவில், தி. நகர் சென்னையில் நடந்தது. அப்பா discharge ஆகி வீட்டிற்கு வந்து விட்டாலும், காலையில் அவரது நர்சிங் வேலைகள் முடிய 9 மணி ஆகிவிடும் என்பதால், ராஜாவிடம் (பெரிய அண்ணா) "கல்யாண வேலைகள் தாமதப்பட வேண்டாம், நான் வந்து சேர்ந்து கொள்வேன்" என்று கூறிவிட்டார். அதுபோலவே திருமணம் முடிந்து, பத்து நிமிடத்தில் வந்துவிட்டார். ரிசப்ஷனில், உடல் நிலை காரணமாக, அவரால் பங்கெடுக்க இயலவில்லை.  திருமணம் முடிந்தவுடன், ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் பதிவு செய்து விட்டோம். சித்ரா மன்னியின் அப்பா திரு. வெங்கடேசன், சிவா விஷ்ணு கோயில் ஏற்பாடுகளையும், ரிஜிஸ்டர் ஆபீஸ் வேலைகளையும் முன்னின்று செய்து கொடுத்தது, எப்பொழுதும் நினைவில் இருக்கும். மாலை ரிசப்ஷன் Hotel Kanchiயில் நடைபெற்றது. ஏறக்குறைய 200 பேர்கள் வந்திருப்பார்கள் என்பது என் யூகம். பாட்டுக் கச்சேரி நடத்தியது எனது உடன் பிறந்தவர்களின் குழந்தைகள். (6 வயதில் இருந்து 18 வயது வரை 11 பேர்) அந்தப் படங்களை இப்பொழுது காணும் பொழுதும் சந்தோஷமாக இருக்கிறது. 

கடந்து வந்த பாதையும் உறவினர்களும்: இந்த 30 ஆண்டுகளில் 11 இடங்களில் வாழ்ந்து விட்டோம், (அதுவும் கடைசி 8 ஆண்டுகளாக கோவையில் 😊). எனக்கும் உஷாவுக்கும் மிகவும் சந்தோஷம் அளித்தது நாங்கள் அப்பாவுடனும் அம்மாவுடனும் சேர்ந்து வசித்த அண்ணாநகர், சென்னை வீடும், திருப்பூரில் இருந்த மூன்று ஆண்டுகளும் தான். உஷாவின் கலகலப்பு, அனுசரிப்பு, அரவணைக்கும் சுபாவம் அம்மா, அப்பாவின் சந்தோஷத்திற்கு காரணமாயின. SBT வங்கியைப் பற்றிய விவரங்கள் உஷாவின் மூலம்தான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய தெரிய வந்தது. உஷாவின் மேல் அளவு கடந்த அன்பு செலுத்தினார்கள். பதிலுக்கு உஷாவும் (கூடுதலாகவே). அப்பா, எங்களுடன் இருந்தது அண்ணா நகர் வீட்டில் மட்டும் தான். (2000ல் காலமாகிவிட்டார்). ஆனால் அம்மா, நாங்கள் வசித்த அனைத்து இடங்களிலும் ‌(உஷா கொடுத்த உற்சாகத்தால் சிங்கப்பூர் உட்பட) குறைந்தது இரண்டு மாதமாவது எங்களுடன் வந்து தங்கியிருக்கிறார். எனது உடன் பிறந்தவர்களும், உஷாவின் உடன் பிறந்தவர்களும் இந்தியாவில் நாங்கள் வசித்த அனைத்து நகரங்களுக்கும் வந்திருக்கிறார்கள். குறிப்பாக உஷாவின் தம்பி குமார் (சீனிவாசன்) எங்களுக்கு எந்த ஊருக்கு மாற்றம் வந்தாலும், தனது தொழிலுக்கு சில நாட்கள் விடுமுறை கொடுத்துவிட்டு எங்களுடன் கூட வந்து, புதிய வீட்டை சரி செய்து தருவார். (இந்த சேவைக்கு எப்படி பதில் மரியாதை செய்வது?). சிங்கப்பூருக்கு மட்டும், அம்மா தவிர எனது முதல் இரண்டு அண்ணாக்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வந்தார்கள். (மற்றவர்களுக்கு அப்பொழுது பாஸ்போர்ட் இல்லை). சந்தோஷமான விஷயம் என்னவென்றால், சுந்தரின் மகள் கீர்த்தனா தீபக்குடன் கல்யாணமானவுடன் முதலில் விஜயம் செய்தது எங்கள் பெங்களூர் வீட்டுக்குத்தான். அங்கிருந்து புட்டபர்த்தி போனார்கள். அதுபோல சாய் சந்தோஷும் சுபஸ்ரீயும் கல்யாணமானவுடன், ஊட்டிக்குச் செல்ல எங்கள் கோயம்புத்தூர் வீட்டிற்கு வந்து விட்டுப் போனார்கள். என் பெரியப்பா மகன் சங்கரின் மகனும், மகளும் கல்யாணம் ஆனவுடன் முதல் ஹனிமூன் சிங்கப்பூருக்குத்தான் (நாங்கள் அங்கு இருக்கும்போது). உஷாவின் cousin R.கண்ணன் சிங்கப்பூர் உட்பட அனைத்து இடங்களுக்கும் வந்திருக்கிறார். உஷாவின் cousins பிச்சை என்று அழைக்கப்படும் நாராயணனும்  SK என்று அழைக்கப்படும் S.கண்ணனும், பிச்சையின் மகன் முரளியும் எங்கள் மேல் உள்ள அன்பால் நாங்கள் வசித்த பல இடங்களுக்கு வந்திருக்கிறார்கள். 

பாமா, கோமளா, குமார் (உஷாவின் அக்காக்கள் மற்றும் தம்பி) எங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இப்போது இருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டை 2018ல் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.

எனது அண்ணன், அக்கா, தங்கை மக்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறார்கள். சிங்கப்பூருக்கு நாங்கள் போனபோது எங்களை வரவேற்றது ஸ்ரீதர். அருண்குமார் IndusInd Bankல் இரண்டு வருடம் வேலை பார்த்தான். ரமணன் எங்களை துபாயிலும் ஸ்வீடனிலும் நன்கு கவனித்துக் கொண்டான். கீதா, வித்யாவின் கல்யாணத்திற்காக நகைகள் செய்தது பெங்களூரில். ரமணன், அனு அடிக்கடி கோவை விஜயம். கார்த்திக் பாலாஜி உமா கோவைக்கு வருடம் ஒரு முறையேனும் வருகிறார்கள்.

நாங்கள் இதுவரை வாழ்ந்தது சந்தோஷமாகத்தானே என்று கேட்டால் சில விஷயங்களை கூறலாம். 

1. உஷாவிற்கு IndusInd Bank offer வந்தபோது posting திருப்பூரில் (என் posting சாலக்குடியில்). சம்பளம் நான் வாங்கியதைப் போல மூன்று மடங்கு. நான் சந்தோஷமாகவே சம்மதித்தேன். அதுபோல எனக்கு சிங்கப்பூர் assignment SBIயில் வந்தபோது உஷா IndusInd Bankல் பெரிய positionல் சென்னையில் இருந்தாள். ஆனால் அதை உடனே ராஜினாமா செய்து விட்டு என்னுடன் சிங்கப்பூர் வந்து விட்டாள். அதற்குப் பிறகு வேலையின் பக்கமே திரும்பவில்லை. 

2. எங்களிடம் சிலர் "எவ்வளவு குழந்தைகள்" என்று கேட்டு விட்டு நாங்கள் "ஒன்றும் இல்லை" என்று கூறியதும் தீயை மிதித்து விட்டது போல "sorry, sorry" என்பார்கள. எங்களை பொறுத்தவரை, இந்த விஷயம், எள்ளளவும், இருவரையும் பாதித்ததில்லை. அதனால், மென்மையாகச் சிரித்து, அமைதியாக பேச்சை மாற்றி விடுவோம். 

3. என் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அதை விட என் நண்பர்களுக்குமே என்னை விட உஷாவின் மேல் பிரியம் அதிகம். அதுபோல உஷாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் என் மேல், உஷாவை விட, அதிக அன்பு செலுத்துகிறார்கள். இதுவே எங்கள் வாழ்க்கை வெற்றிகரமாய் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு அத்தாட்சி. 

முடிவாக உஷாவிற்கு நான்கு ஆசைகள். ஒன்று அப்பா கொடுத்த சாலிக்கிராம விக்ரஹங்களுக்கு (பஞ்சாயதனம்) (அப்பா கொடுத்தது) நான் தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது. இரண்டு நான் ருத்ரம், சமகம் கற்றுக்கொண்டு தினசரி சொல்ல வேண்டும். மூன்று முடிந்தவரை பல இடங்களை சென்று காண வேண்டும். நான்கு - நல்ல நினைவில் இருவரும் இருக்கும்போதே,, நல்ல காரியங்களுக்கு பணத்தை செலவிட வேண்டும், ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது. ஆனால் நான் அவளுக்கு முழு திருப்தியும் இதுவரை கொடுக்க இயலவில்லை. சாலிகிராம விக்கிரகஙகளுக்கு (பஞ்சாயதன பூஜை) தினமும் கண்டிப்பாக பூ உண்டு , அர்ச்சனை உண்டு, அபிஷேகம் முறையாக இல்லை. இரண்டு ருத்ரம், சமகம் கற்றுக்கொள்ள மனதினில் ஆசை உண்டு இதுவரை கற்க உறுதி வரவில்லை. பல இடங்கள் செல்ல வேண்டும் என்பது - சில இடங்களுக்கு சென்றிருக்கிறோம் என்ற அளவிலேயே நிற்கிறது. இது மூன்றையும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற தோணல் உண்டு, ஆனால் இன்னமும் உத்வேகம் வரவில்லை. நான்காவதற்கான ஏற்பாடுகளை செய்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் காலங்களிலும்,  மன நலத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும்,  இணைந்தே பயணிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை கடவுள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு.  

உங்கள் வாழ்த்துக்கள் அதற்கு துணை நிற்கும்.

வாழ்க நலமுடனும் வளமுடனும். 

வெ.‌விஸ்வநாதன்

4th May 2025





Comments

  1. Excellent,narration!!!!Each and every happening in your married life comes on surface of the mind.Wishing and Praying Almighty for your 100 years of togetherness with utmost happiness and May the 4 things what Usha wants you to fulfill! become true.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. Thank you Uma Parvathi. God bless

      Delete
  2. K. R. Venkatessn.May 7, 2025 at 10:35 PM

    அன்பு நண்பர் விசுவின் 30 ஆண்டுகால திருமணவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்கள் முழுவதும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்... 🙏

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. வாழ்க நலமுடன் வளமுடன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

IBC resolutions and haircuts

The woes of an Indian urban senior citizen

An open letter