தமிழக முதல்வர் வெற்றி பெற....

 தமிழகத்தின் புதிய முதல்வர் வெற்றி பெற 
ஏற வேண்டிய  படிக்கட்டுகள்

தமிழகத்தின் முதல்வராக  திரு. C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கும் மற்றவர்கள் முதல்வராக பதவியேற்றதற்கும் உள்ள மூன்று முக்கிய வித்தியாசங்களாக நான் காண்பது. 

1. 60 வருடங்களாக தமிழகத்தை ஆண்ட இரண்டு மாநில கட்சிகள் வேண்டாம் என்ற எதிர்மறை ஒட்டுகள். இவரது தமிழ் படங்களில் வெளிப்படுத்திய நடிப்பால் ஈர்க்கப்பட்டு ரசிகர்களானவர்களின் நேர்மறை ஓட்டுகள். முதல் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்ற இளைஞர்களின் ஓட்டுகள். வாக்களிக்கும் உரிமை பெறாத 5-18 வயதுக்கு உட்பட்ட பால் மணம் மாறா சிறுவர்-சிறுமியர்களின் வற்புறுத்தலால் வீட்டு பெரியவர்கள் அளித்தவை. சிறுபான்மை வகுப்பினரில் பெரும்பாலோர் அளித்த வாக்குகள். ஆக, நேர்மறை பாதி, மற்ற கட்சியினரின் மீதான எதிர்மறையில் பாதி என்று அவர் வாக்குகளை கணக்கிடலாம். பழைய வலி  நிவாரணிகள் பயன் தராததால் 'புதிய நிவாரணி' நாடி இருக்கிறோம். அது ஒரு 'மாற்று' மட்டும் தானா அல்லது 'வாராது வந்த மாமணியா' என்பதை புதிய முதல்வரின் செயல்கள் தீர்மானிக்கும். 

2. அவர் படங்களின் கதாநாயகன். கதாநாயகனின் கதையையும் வசனத்தையும் ஒருவர் எழுதினார். படத்தில் அவரின் பாதையை இயக்குனர் தீர்மானித்தார். படம் முடியும்போது நல்லவன் வல்லவன் ஆகியதோ அல்லது வல்லவன் நல்லவனாக மாறியதோ தெரியும். கதாநாயகனின் வெற்றியுடனோ/சேவையின் வெற்றியுடனோ படம் முடிவடையும். ஆனால், இங்கு முதல்வரின் பாதை வெற்றியில் தொடங்கி இருக்கிறது. கதையில் கதாநாயகனின் சுற்றுப்புற சூழ்நிலைகளையும் முடிவையும் இயக்குனர் முன்னரே தீர்மானித்திருப்பார். இங்கு சுற்றுப்புற சூழ்நிலைகள் யாருக்கும் அடங்காதவை. அவற்றின் போக்கை உணர்ந்து, செய்ய நினைக்கும் செயல்களை இயக்குனர்--வசனகர்த்தா  உதவியின்றி, நிஜ வாழ்க்கையில் கதாநாயகன் செய்ய வேண்டும். புதிய முதல்வரிடம் தன்னம்பிக்கை தெரிகிறது. 

3. MLAக்கள் பலதரப்பினராக இருக்கிறார்கள். பழைய அரசியல் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் சிலர். புதிதாக, அதிகார வர்க்கத்திலிருந்தும், மற்ற வேலைகளில்/வியாபாரங்களில் இருந்து வந்தவர்கள்  சிலர். விஜய் என்ற நடிகரின் தீவிர ரசிகர்கள் என்று சிலர். எனவே, தவெக MLAs ஒரு கூட்டுக் கலவை என்று வைத்துக் கொள்ளலாம். அரசியல்  கற்ற அனுபவசாலிகளையும்,  புதியவர்களையும் - அரசியலையும், அரசு நிர்வகிப்பதையும், ஆர்வத்துடன் கற்றுக் கொண்டிருக்கும் முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும். வழி நடத்த வேண்டும். 

வாக்குறுதிகள்

ஏராளமான வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. பலவும் நிதி  சார்ந்தவை. சட்டம்-ஒழுங்கு, பாலியல் கொடுமை இன்மை,  போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவது போன்றவை நிதி நிலைமைக்கு அப்பாற்பட்டவை. அவைகளில் எனது அறிவு குறைவு. எனவே நான் நிதி நிலை சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன்.

முக்கியமானவை:

1. 200 யூனிட் இலவச மின்சாரம் 

2. பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் 

3. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ₹2500 

4. முதியோர் மாத குடும்ப ஓய்வூதியம் ₹3000

5. ஒரு குடும்பத்திற்கு  ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்.

6. 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் 

7. வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ₹4000

8. விவசாயிகளுக்கு

- பயிர் கடன் தள்ளுபடி 

- ஆண்டுக்கு ₹15000

- MSP அதிகப்படி உயர்வு நெல்லுக்கும் கரும்புக்கும் 

1. இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தபவர்களுக்கு,  200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டு விட்டது. இதற்காக அரசு மானியம் ₹1730 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.. நல்ல விஷயம். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது தமிழ்நாடு மின்சார வாரியம், நிதி அமைச்சர் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு கவனிக்கப்படாத நோயுற்ற யானை. Tangedcoவின் இதுவரையிலான நிகர மதிப்பிழப்பு ₹1.46 லட்சம் கோடி. செலுத்த வேண்டிய கடன் தொகை ₹1.36 லட்சம் கோடி. ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ₹16000 கோடி. 2026 இடைக்கால பட்ஜெட்டில் மானியமாக கொடுக்கப்பட்ட தொகை ₹14442 கோடி. இது கொண்டு முழுமையான வட்டி கட்ட கூட இயலாது. ஏற்கனவே Tangedco loans were restructured along with other state governments' electricity boards' dues once. அதனால் வங்கிகள் மீண்டும் ஒரு கடன் சீரமைப்புக்கு ஒத்துக் கொள்ள வாய்ப்பில்லை. இந்த யானைக்கு உடனடி உதவியும், நீண்ட கால சிகிச்சையும் தேவைப்படுகிறது. சமூகத்தில் மேற்பட்ட/நடுத்தர குடும்பத்தினருக்கும் கூட ஒரு  குளிர்சாதன அறையுடன் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் தான் செலவாகும். எனவே அரசு இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து, மாத வருமானம் குறிப்பிட்ட வரம்பிற்குள் உள்ளவர்க்கு மட்டுமே,  இந்த சலுகையை அளிக்க வேண்டும்.. அனைவருக்கும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் என்பதையும் மறுபரிசீலனை செய்து ஏழை மக்களுக்கு மட்டுமே இத்திட்டம் என்று வரையறை செய்ய வேண்டும். விவசாயிகளில் சிறு குறு நில விவசாயிகளுக்கு மட்டுமே (5 ஏக்கருக்குள்) இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நிச்சயமாக எதிர்ப்புக் குரல்கள் கேட்கும். மக்கள் தொகையில் பெரும்பான்மை ஏழை மக்கள் என்பதால் அவை அடிபட்டு போகும். செய்ய வேண்டியது நேர்மையான வெளிப்படையான அறிவிப்பு மட்டுமே. தொலைதூரப் பார்வை கொண்டு மின்சார வாரியத்தை உள்கட்டமைப்பு சீரமைப்புடன், பயன்படுத்தப்படும் யூனிட்டின் கட்டணம் மின்சார வாரியம் வெளியாருக்கு செலுத்தும் tariffக்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும். 

2. தகுதி பெற்ற மகளிருக்கு உரிமை தொகை என்று கடந்த இடைக்கால பட்ஜெட்டில் ₹14412 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ₹1000 என்பதை ₹2500 என்று மாற்றி அமைத்தால், இப்பொழுது பயன் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே, வருடம் ₹22000 கோடி கூடுதல் செலவாகும். அனைத்து குடும்பத் தலைவிகளையும் சேர்த்தால் அம்மம்மா... தலை சுற்றுகிறது..

3. கணினி வழி நிர்வாகம் என்று ஆன பிறகு அரசு வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்பொழுது AI வேறு வந்துவிட்டது. அரசாங்கத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாற்றாக கூட வேலைவாய்ப்பு அளிப்பது கடினம். தேவை என்னவென்றால் தொலைநோக்கு திட்டங்கள். உதாரணமாக 

- தனி நிறுவனங்களில் மூலதனத்தை பெருக்கச் செய்வது,

- வேலைவாய்ப்பை உருவாக்குவது

- சுயதொழில் புரிவோர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது,

- அவர்கள் உருவாக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை கொண்டு வருவது 

போன்றவை தான். 

பட்டதாரிகளுக்கு மாதம் ₹ 4000 வாக்குறுதிக்கு கூட மேற் சொன்னவை பொருந்தும். 

4. பயிர் கடன் தள்ளுபடி என்று கூறினால் கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என்று அனைவருக்கும் மாநில அரசு தான் விவசாயிகள் கட்ட வேண்டிய தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். 10 வருடங்கள் முன்பு தெலுங்கானா அரசு முழுத் தொகையையும் ஐந்து தவணைகளில் வங்கிகளுக்கு செலுத்தியது. ஆனால், விவசாயிகளின் கடனும் தீரவில்லை, பிரச்சினையும் தொடர்கிறது. 

5. ஒரு குடும்பத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள் என்பது இப்போதைக்கு எடுக்க வேண்டாமே. 

இதைப் படிப்பவர்களுக்கு, நான் ஏன் எல்லா இலவசங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகிறேன் என்று கோபம் வந்தால் கீழ்க்கண்ட கடந்த அரசின் வரவு செலவு கணக்கை (இடைக்கால பட்ஜெட்டில் வந்தவை) படிக்கவும்.

1. கடந்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டுமானால் 33% கடன் வாங்க வேண்டும், ஏனெனில் அரசின் வரவு  (வரி மற்றும் இதர வருமானம்) 67% தான். செலவில் 25% வாங்கிய கடனின் வட்டிக்கும் மாத தவணைகளுக்கும் செல்கின்றது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் வாயிலாக 27% செல்கிறது. மீதம் 48%ல் தான் நிரந்தர செலவுகள், மூலதன செலவுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மானியம் வழங்குவது எல்லாம் கவனிக்கப்பட வேண்டும். 

கடனைக் குறைக்க இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று வருமானத்தைக் கூட்டுவது. இரண்டு செலவுகளை குறைப்பது அல்லது இரண்டையும் ஒன்று சேர்ந்து செய்வது.  

வாக்குறுதிகளை நிறைவேற்றும் முன்பும்,, நிறைவேற்றவும் வருமானத்தைக் கூட்டுவதற்கான வழிகள் ஆராயப்பட வேண்டும். வேண்டாத செலவுகள் அடையாளம் காணப்பட வேண்டும். 

2. Tangedco போன்ற மற்றொரு நோயுற்ற யானை தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள். இவற்றின் நிகர நஷ்டம் கடந்த ஐந்து வருடங்களில்₹24000 கோடியிலிருந்து ₹48000 கோடியாக உயர்ந்திருக்கிறது. மகளிரின் இலவச பயணம் இந்த நஷ்டத்தை மேலும் கூட்டும்.

3.பள்ளிக் கல்விக்கும் உயர்க் கல்விக்கும் அளிக்கப்படும் தொகையில் பெரும் பங்கு சம்பளத்திற்கும் உதவித் தொகைகளுக்குமே செல்கின்றது. ஆயிரக்கணக்கான பள்ளிக்கூட கட்டிடங்கள் பழமையானதாகவும் , அடிப்படை வசதிகள் முழுமையானதாக இல்லாத நிலையில் இருக்கின்றன. இவற்றுக்கு மூலதனச் செலவு தேவை. 

முடிவாக சில விஷயங்கள்: 

1. சிங்கப்பூரின் வளர்ச்சி: சிங்கப்பூரின் முதல் பிரதமர் காலம் சென்ற லீ குவான் யூ, சிங்கப்பூரின் பொருளாதாரத்தையும் மக்களின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த 

 - மக்களின் உடனடி செலவுகளுக்கு மக்களே வருமானம் தேடிக் கொள்ள வழிவகுத்தார்

 - தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களால் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை உயர்த்தினார். 

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும், மத்திய அரசின் துணை கொண்டு, தங்கள் மாநிலத்தை சிங்கப்பூர் மாடலில் உயர்த்த முடியும்,, மனமிருந்தால். 

2. 2022 இலங்கை பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான அரசியல் நெருக்கடியும்: தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட்களும், தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டி வருமானம் மற்றும் கம்பெனி வரிகளை மிகவும் குறைத்தவை முக்கிய காரணங்களாயின.

3. மத்திய அரசு மற்றும் பாஜக செயல்பாடுகள் புதிய முதல்வரின் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டாலும், சில விஷயங்களை அவர்கள் கையாண்ட விதம் பயன்படலாம். உதாரணமாக கோவிட், Article 370 நீக்கம், சாலை மற்றும் ரயில் உள் கட்டமைப்பு மேம்பாடு, fiscal deficit control, கோவிட் சமயத்திலும் கூடுதல் இலவசங்கள் இல்லாமல் ஆட்சி புரிந்தது, நேரடி பயன் வரவு வைப்பு (DBT), MUDRA கடன்கள், UPI வழி தினசரிச் செலவுகள் செய்தல்,  உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்த்தியது என்பனவற்றை குறிப்பிடலாம். அதைப் போலவே குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் பிஜு பட்நாயக் முதல்வராய் இருந்த ஒரிசா ஆகியவை எங்ஙனம் வளர்ச்சி பெற்றன என்பதும் உதவலாம். 

4. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் காமராஜரின் தொலைநோக்குப் பார்வை; மக்கள் பிரச்சினைகளை எளிதாக புரிந்து கொண்டு தீர்க்க முயற்சி செய்தது; மறைந்த மாண்புமிகு திரு. சி சுப்பிரமணியம்,  மாண்புமிகு திரு. வெங்கட்ராமன் மூலம் தொழில் வளர்த்தது, காலம் சென்ற திரு. அண்ணாதுரை ஆட்சி அமைத்த பிறகு அனைவரையும் அனைத்து சென்ற பாங்கு, தோல்விகளிலும் துவளாமல் ஓயாமல் உழைத்து, மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து, கட்சி கட்டமைப்பை பாதுகாத்த கலைஞர் திரு கருணாநிதி, தன் புகழுக்கு சிறிதளவு மாசு வராமல் பத்தாண்டு காலம் ஆட்சி புரிந்த திரு. எம் ஜி ஆர், சிங்க மங்கை என்று போற்றப்பட்ட, கட்சியை தன் கைப்பிடியில் வைத்திருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா இவர்களின் திறமை பாங்குகளை ஒரு ஊக்க சக்தியாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அனைவரும், தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், ஆனால் அதே சமயம் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு கூடுதல் பயன்களைப் பெற்றுத் தந்தவர்கள்.

5. ஊழலற்ற ஆட்சி என்பது முதல்வருடன் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்று அனைவரும் ஒருமித்து பயணித்தால் சாத்தியமே. கடும் முயற்சி தேவைப்படுகிறது.

நிதி நிலைமையை பொறுத்தவரை, முதல்வர் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவரையே நிதி அமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

புதிய முதல்வருக்கும் அவரது சகாக்களுக்கும் அவரது கட்சி உறுப்பினர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். 

வெ. விஸ்வநாதன் 

கோயம்புத்தூர்

19.05.2026

Comments

Popular posts from this blog

Thrissur Memories of SBTians

SBHians Day to remember

Red Salute Com.DPN David